MailPrint
புதுமுக இசையமைப்பாளரை வாழ்த்திய பிரபல பாடகி
[ Monday, 09 July 2012, 03:02.28 PM GMT +05:30 ]

அறிமுக இயக்குனர் ஜி.வி.சந்தர் இயக்கிய 'வெள்ளைக்காகிதம்' படத்தில் சதீஷ், தீப்தி நம்பியார், மயில்சாமி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை ராஜா,ஏ கே எஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

பல இசையமைப்பாளர்களிடம் 'கீ போர்டு' வாசிப்பவராக பணியாற்றிய சதீஷ் வர்ஷன் 'வெள்ளைக்காகிதம்' படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது.பிரபல பாடகி ஜானகி இசைக்குறுந்தகடை வெளியிட, சின்னக்கலைவாணர் விவேக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பாடகி ஜானகி பேசும் போது, பட உலகின் இசை ஜாம்பவான்களுக்கு குறைவில்லாமல் இப்படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். இப்படி மெலடியாக இசையமைக்க இப்போதெல்லாம் யார் விரும்புகிறார்கள். சதீஷ் மெலடியை அழகாக கொடுத்துள்ளார்.

அந்தக்காலத்து இனிமையை இந்தக்காலத்து ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி சதீஷ் இசையமைத்துள்ளார். அவரை நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், நான் 15 ஆண்டுகளுக்கு முன் போட்ட மெட்டு இந்தப்படத்துக்கு தேர்வான போது உழைப்பு என்றும் வீண் போகாது என்று உணர்ந்தேன்.

ஜானகி அம்மாவை இந்தப்படத்துக்காக பாட வைத்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.

சின்னக்கலைவாணர் விவேக், இந்தப்படத்தின் இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷனை பல ஆண்டுகளாக எனக்கு நன்றாக தெரியும்.இயக்குனர் எஸ்.ஏ.சி.,யிடம் சதீஷ் உதவியாளராக இருந்தார். தமிழ் சினிமாவில் சதீஷ் நிச்சயம் வெற்றி பெறுவார்.

ஒரு படத்துக்கு ஐம்பது சதவீதம் வெற்றியை அதன் ஆடியோ தீர்மானித்து விடும். இந்த வெள்ளைக்காகிதம் படத்தின் வெற்றிக்கு ஆடியோ வெற்றி முகாந்திரம் அமைத்து கொடுத்து விட்டது என்றார்.

இயக்குனர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், கவிஞர் விவேகா மற்றும் திரையுலக பிரமுகர்கள் 'வெள்ளைக்காகிதம்' படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்கள்.